ஏலச்சீட்டு நடத்தி ரூ.85 லட்சம் மோசடி


ஏலச்சீட்டு நடத்தி ரூ.85 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 12 May 2022 6:13 PM GMT (Updated: 12 May 2022 6:13 PM GMT)

கடலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.85 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்

கடலூர் அருகே உள்ள வரக்கால்பட்டை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 51). இவரது மனைவி புஷ்பா (47). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கடலூர் கோண்டூரை சேர்ந்த அன்பு மனைவி கலைமதி(60) உள்பட பலர் அவரிடம் ஏலச்சீட்டும், தீபாவளி சீட்டும் தனித்தனியாக கட்டி வந்தனர். இதில் ஏலச்சீட்டு முடிந்தும் கலைமதி உள்ளிட்ட 19 பேருக்கு புஷ்பா பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

19 பேர் புகார்

இதையடுத்து அவர்கள் தாங்கள் செலுத்திய பணத்தை பலமுறை திருப்பி கேட்டும், புஷ்பா பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதற்கிடையே புஷ்பா தனது குடும்பத்தினருடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமறைவாகி விட்டார்.இதுகுறித்து கலைமதி உள்ளிட்ட 19 பேரும், கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அவர், ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தம்பதி கைது

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புஷ்பா ஏலச்சீட்டு நடத்தி ரூ.85 லட்சம் வரை மோசடி செய்துள்ளதும், அதற்கு அவரது கணவர் ராஜாராம் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பா, ராஜாராம் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வரக்கால்பட்டு பகுதியில் பதுங்கி இருந்த  2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது  செய்தனர்.

Next Story