2 ஆண்டுகளுக்கு பிறகு பெரம்பலூர் நீச்சல் குளம் இன்று திறப்பு
2 ஆண்டுகளுக்கு பிறகு பெரம்பலூர் நீச்சல் குளம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்படுகிறது.
பெரம்பலூர்,
நீச்சல் குளம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் 2014-15-ம் நிதியாண்டில் பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.
இந்த நீச்சல் குளத்தில் சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக குளிப்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நீச்சல் குளத்திற்கு வருகை தருவார்கள். நீச்சல் பயிற்சிக்கும், குளிப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கின் போது அரசின் உத்தரவின்படி இந்த நீச்சல் குளம் மூடப்பட்டது.
புனரமைப்பு
அதன் பிறகு கொரோனா ஊரடங்கில் அரசு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் பெரம்பலூர் நீச்சல் குளம் பராமரிப்பு இன்றி பழுதாகியதால் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவின் பேரில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சுரேஷ்குமார் வழிக்காட்டுதலின் பேரில் நீச்சல் குளம் பழுது பார்த்து புனரமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
இதனால் நீச்சல் குளம் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். நீச்சல் குளம் திறக்கப்படுவதால் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கட்டணம்
நீச்சல் குளத்தில் சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு பயிற்சி பெற கட்டணம் கிடையாது. தேசிய அளவில் பதக்கம் பெற்றவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு ரூ.1,000 மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும், மாநில அளவில் பதக்கம் பெற்றவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு ரூ.1,600 மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும், மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்துடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும், மாதத்திற்கு ரூ.600 மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும், காலாண்டுக்கு ரூ.1,200 மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும், அரையாண்டுக்கு ரூ.1,800 மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும், ஆண்டிற்கு ரூ.3 ஆயிரத்துடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. மேலும் பராமரிப்பு பணிக்காக பிரதி வாரம் திங்கட்கிழமை நீச்சல் குளத்திற்கு விடுமுறை விடப்படுகிறது.
உடற்பயிற்சி கூடமும் திறப்பு
இதேபோல் விளையாட்டு வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடமும் கொரோனா ஊரடங்கினால் திறக்கப்படாமல் பராமரிப்பின்றி பழுதாகி இருந்தது. தற்போது பழுது பார்த்து புனரமைக்கப்பட்டதால் உடற்பயிற்சி கூடமும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி கூடத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பயிற்சி மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி கட்டணமாக மாதம் ரூ.500 உடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யும் வசூலிக்கப்படவுள்ளது. பராமரிப்பு பணிக்காக பிரதி வாரம் திங்கட்கிழமை உடற்பயிற்சி கூடத்திற்கு விடுமுறை விடப்படுகிறது.
Related Tags :
Next Story