தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 13 May 2022 12:57 AM IST (Updated: 13 May 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த மின்கம்பம் 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் வடக்கு மாடவீதியில் உள்ள சொர்க்கவாசல் எதிரில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. விபத்து ஏற்படும் முன்னர் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் என்.ஜி.ஓ.காலனி, சர்வேயர் காலனி ஆகிய பகுதிகளில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. பகலில் கூட்டமாக திரிந்து சாலையில் செல்வோரை துரத்துகிறது. இரவில் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கிறது. தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், சர்வேயர் காலனி.
நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் நகரில் கலெக்டர் அலுவலகம் முதலான  அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவரில் எண்ணற்ற சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. இதேநிலைமை தான் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புசுவர்களிலும், பள்ளி வளாக சுற்றுச்சுவர்களிலும் காணப்படுகிறது. அதிகாரிகள் இதனை கவனித்து சட்டவிரோதமாக சுவரோட்டிகளை ஒட்டுவோரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
போக்குவரத்து நெரிசல்
மதுரை மாவட்டம் தெற்குவாசலில் தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. நடைபாதை மற்றும் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தப்பகுதியை பயன்படுத்தும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரிெசய்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும்.
அபு, தெற்குவாசல்.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மேலத்துறையூர் கிராமத்தில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளிக்கட்டிடத்தின் மேல் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வான நிலையில் சென்றுவருகின்றன. காற்று வீசும் போது மின்கம்பி அறுந்து விழக்கூடிய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சப்படுகின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு மேல் செல்கிற தாழ்வான மின்கம்பிகளை மாற்றுப்பகுதியில் செல்லுமாறு அமைக்க வேண்டும்.
சுப்பிரமணியன், மேலத்துறையூர். 
சேதமடைந்த சாக்கடை மூடி
மதுரை மாவட்டம் 41-வது வார்டு சவுராஷ்டிரா டீச்சர்ஸ் காலனி, பிள்ளையார் கோவில் எதிரில் பாதாள சாக்கடை மூடி போட்டு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாக்கடை மூடியானது கடந்த சில மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமப்படுகிறார்கள். இரவில் உடைந்த சாக்கடை மூடி தெரியாமல் அடிக்கடி இதில் கிழே விழுந்தும் வருகின்றனர். விபத்து ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மூடிைய சரிசெய்ய வேண்டும்.
அப்பாஸ், அனுப்பானடி.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்லூர் ஊராட்சி முத்துராமலிங்கபுரம்-திருவரங்கம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தினமும் தாமதமாக செல்லும் நிலை நிலவுகிறது. மேடும், பள்ளமுமான சாலையால் வாகன ஒட்டிகள் சாலையில் தடுமாறி விழுகிறார்கள்.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
முத்துரவிக்குமார், முதுகுளத்தூர்.
அலங்கார விளக்குகள் வேண்டும்   
மதுரை மாவட்டத்தில் வைகையாறு ஓடுகிறது. இந்நிலையில் இந்த நகரின் நடுவே ஆறு ஓடும் பகுதியின் மைய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் முக்கிய பங்காற்றும். இந்நிலையில் இந்த மண்டபத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளை இது கவனிக்க செய்யும்.
அன்புமணி, மதிச்சியம்.


Next Story