அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அல்வா கொடுத்து விட்டது


அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அல்வா கொடுத்து விட்டது
x
தினத்தந்தி 13 May 2022 1:11 AM IST (Updated: 13 May 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அல்வா கொடுத்து விட்டது என்று செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை, 
மதுரை மாநகராட்சியில் நடந்த தாக்குதல் சம்பவம் வரலாற்று பிழையாகும். அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அல்வா கொடுத்து விட்டது என்று செல்லூர் ராஜூ கூறினார்.
மேயரின் கணவர்
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சியில் மேயர் அறைக்கு சென்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தடுத்து தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது வரலாற்று பிழையாகும். மேயர் அறையில் குண்டர்களுக்கும், ரவுடிகளுக்கும் என்ன வேலை. மதுரை மாநகராட்சியில் மேயரின் கணவருக்கு என்ன வேலை. நிர்வாகத்தில் மேயரின் கணவர் தலையிட யார் அனுமதி கொடுத்தது?. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கணவர்கள், நிர்வாகத்தில் தலையிட கூடாது என்று எச்சரித்து உள்ளார். ஆனால் மதுரையில் முதல்-அமைச்சரின் உத்தரவையே மீறி தி.மு.க.வினர் செயல்படுகின்றனர்.
இந்த நிலை நீடித்தால் மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பாக போராட்டம் நடத்தப்படும். மணமும், குணமும் மாறாது என்று எம்.ஜி.ஆர். பாடுவார். அது போல தான் தி.மு.க.வினரின் ரவுடித்தனத்தையும், அராஜகத்தையும் மாற்ற முடியாது. சட்டசபையில் கூட எதிர்கட்சிகளுக்கு உரிய இருக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க.வினருக்கு உரிய இருக்கை வசதியும், அறையும் ஒதுக்கவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனரிடம் முறையிட்டும் பலனில்லாமல் உள்ளது.
தி.மு.க. அல்வா
மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாக கூறி, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தி.மு.க. கூறுகிறது. ஆனால் தி.மு.க. அரசு அவர்களுக்கு கீழ் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை. கூட்டுறவு சங்கங்களில் உள்ள பிரதிநிதிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. மாநில சுயாட்சி என்று கூறுவதற்கு தி.மு.க.விற்கு தகுதி இல்லை. கூட்டுறவு துறை உள்பட கருணாநிதி கொண்டு வந்த சில நல்ல சட்டங்களை எல்லாம் இப்போது மாற்றி கொண்டு இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு நிதி நிலைமை சரியில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றி விடுவார். அவரை போல மு.க.ஸ்டாலினும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். ஆனால் பழைய ஓய்வூதியம் எல்லாம் வழங்க முடியாது என்று கூறி அவர்களுக்கு தி.மு.க. அல்வா கொடுத்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story