கோவில் திருவிழாவிற்கு வைத்திருந்த சாமி சிலை சேதம்


கோவில் திருவிழாவிற்கு வைத்திருந்த சாமி சிலை சேதம்
x
தினத்தந்தி 13 May 2022 1:13 AM IST (Updated: 13 May 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே கோவில் திருவிழாவிற்கு வைத்திருந்த சாமி சிலையை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விக்கிரமங்கலம், 
வள்ளியம்மன் கோவில்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அறங்கோட்டை கிராமம் உள்ளது. இங்குள்ள வள்ளியம்மன் கோவிலில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். 16 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மரத்தாலான குதிரையில் நொண்டி வீரன் அமர்ந்து இருப்பது போன்ற சிலையை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு ஊர்வலத்திற்கு எடுத்து செல்வதற்காக மரத்தாலான குதிரையில் நொண்டி வீரன் அமர்ந்து இருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த சிலைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.
சாமி சிலை சேதம்
இந்தநிலையில், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் நடைபெற்ற காளியம்மன் நடன விழாவை காண பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சென்றனர். அப்போது வள்ளியம்மன் கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த மர்ம ஆசாமிகள் சிலர் கோவிலின் முன்பு இருந்த மரத்தாலான நொண்டி வீரன் சிலையை சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடினர். 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது குதிரையின் கால் ஒன்று துண்டாக உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், குதிரையின் முகம் மற்றும் நொண்டி வீரன் சிலையில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட கீறல்கள் இருந்தன.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் சிலையை சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவில் திருவிழாவிற்கு வைத்திருந்த சாமி சிலையை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story