குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க வேண்டும்;மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்


குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க வேண்டும்;மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 13 May 2022 1:20 AM IST (Updated: 13 May 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பஞ்சாயத்து கூட்டம்
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் அம்பிளி, செலின் மேரி, லூயிஸ், ராஜேஷ் பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல், ஜான்சிலின் விஜிலா, நீலபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு மாவட்ட ஊராட்சி பொது நிதியில் இருந்து உரிய பங்கு தொகை அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஒரு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
மண்டல புற்றுநோய் மையம் 
மேலும் கூட்டத்தில், ரெயில்வே துறையில் தொடர்ந்து குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டம் அமைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்துக்கு செல்ல வேண்டியது உள்ளது. அதை தவிர்க்கும் பொருட்டு குமரி மாவட்டத்தில் மண்டல புற்று நோய் மையம் அமைக்க வேண்டும்.
மார்ஷல் நேசமணி பெயரில் குமரியில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் மாவட்டத்தில் ஏராளமான பஸ்களை இயக்க வேண்டும். ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்த கூடுதல் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட பஸ்போர்ட் பணி முடங்கியுள்ளது. அந்த பணியை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Next Story