தினதந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி திப்பிராஜபுரம் கிராமத்தில் உள்ள கிழக்கு அக்ரஹாரத்தில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்கள் மண்பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-அனந்தன், கும்பகோணம்.
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் லாரிகள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி மேம்பாலம் கஸ்தூரிபாய் சாலையில் இருந்து குட்ஷெட்ரோடு, இளங்காநகர் வரை உள்ள சாலையின் இருபுறமும் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலையின் வளைவுகளில் லாரிகள் நிறுத்தப்படுவதால் எதிரே வாகனங்கள் வருவது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி லாரிகள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரிகள் நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா.
-பொதுமக்கள், கும்பகோணம்.
ஆபத்தான மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி கண்ணந்தங்குடி மேலையூர் ஊராட்சி ஆர்.எஸ்.மலையப்பன் நகரில்பொதுமக்கள் வசதிக்காக மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது. இந்த மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டி இருக்கும் பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
Related Tags :
Next Story