கும்பகோணம் பொற்றாமரை குளம் முறையாக பராமரிக்கப்படுமா?
பாசி படர்ந்து காணப்படும் கும்பகோணம் பொற்றாமரை குளம் முறையாக பராமரிக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கும்பகோணம்:
பாசி படர்ந்து காணப்படும் கும்பகோணம் பொற்றாமரை குளம் முறையாக பராமரிக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவில் நகரம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டம் கோவில்கள் நிறைந்த மாவட்டமாகவும் விளங்குகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகரில் பல கோவில்கள் உள்ளன. இதனால் கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சாமி கோவில், கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த சிறப்பு வாய்ந்த வைணவ தலமாக இந்த கோவில் போற்றப்படுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாக கருதப்படும் பெருமையுடையது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த இந்த கோவிலில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார்.
பொற்றாமரை குளம்
இந்த கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. மகாமக குளத்தை அடுத்து பிரசித்தி பெற்ற குளமாக இது திகழ்கிறது. பிரளய காலத்தில் அமிர்தம் விழுந்த இடமாக கும்பகோணம் மகாமக குளமும், பொற்றாமரை குளமும் திகழ்கின்றன.
சாரங்கபாணி சாமி கோவிலின் புனித தீர்த்தமாக பொற்றாமரை குளம் திகழ்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக திருவிழாவுடன் இந்த பொற்றாமரை குளம் தொடர்புடையது. அதாவது மகாமக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான மக்கள் கும்பகோணம் மாநகருக்கு வந்து கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சிந்து, சரயு முதலிய 9 புண்ணிய நதிகளும் ஒன்றுகூடும் மகாமக குளத்தில் நீராடுவார்கள். அதன்பின்னர் பொற்றாமரை குளத்தில் நீராடிவிட்டு பிறகு காவிரியிலும் நீராடுவார்கள்.
தெப்ப உற்சவம்
சாரங்கபாணி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்ப உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இதற்காக 30 அடி, நீள அகலத்தில் தெப்பம் செய்யப்பட்டு அதில் சாமியை வைத்து குளத்தை சுற்றி வருவார்கள்.
கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கும்பகோணம் பொற்றாமரை குளத்தை பார்க்காமல் செல்லமாட்டார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த பொற்றாமரை குளத்தின் தற்போதைய நிலையோ பக்தர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
பாசி படர்ந்து காணப்படும் தண்ணீர்
முறையாக பராமரிக்கப்படாததால் குளத்தின் படிக்கட்டுகளில் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. குளத்தின் மையப்பகுதியில் உள்ள மண்டபத்தின் மேல்பகுதியிலும் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மண்டபத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொற்றாமரை குளத்தில் தண்ணீர் குறைவாக காணப்படுகிறது. இந்த தண்ணீரிலும் பாசி படர்ந்து காட்சி அளிக்கிறது.
தொடர்ந்து பாசி படர்ந்து காணப்பட்டால் துர்நாற்றம் வீச வாய்ப்பு உள்ளது. எனவே பிரசித்தி பெற்ற பொற்றாமரைக் குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றுவதுடன் தண்ணீரில் உ்ளள பாசிகளையும் அகற்றி நீர் நிரப்ப வேண்டும் என்பதும், இந்த குளத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என்பதும் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
Related Tags :
Next Story