கல்லணையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
காவிரி டெல்டா பாசனத்திற்காக வருகிற ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளதால் கல்லணையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருக்காட்டுப்பள்ளி:
காவிரி டெல்டா பாசனத்திற்காக வருகிற ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளதால் கல்லணையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கல்லணை
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை பகிர்ந்து வழங்கும் அணையாக விளங்குவது கல்லணை. தஞ்சை மாவட்டத்தின் முகப்பில் அமைந்துள்ள கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பிரிகின்றன.
ஓடும் நதியின் குறுக்கே கட்டப்பட்ட முதல் அணை என்ற பெருமையையும், சோழநாட்டை ஆண்ட கரிகால் சோழ மன்னனால் எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலத்தில் கட்டப்பட்டு, இன்றளவும் பல்வேறு வெள்ளங்களையும் தாங்கி தலை நிமிர்ந்து நிற்கும் அணை கல்லணை.
புனரமைப்பு பணிகள்
பாம்பு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்லணை அஸ்திவாரத்தில் பெரும் பாறைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லணை தன்னுடைய சுய எடையை கொண்டு பல்வேறு வெள்ளங்களை சந்தித்திருக்கிறது என்று வரலாறு கூறுகிறது. மாமன்னன் கரிகாலன் அடித்தளமிட்ட கல்லணையில் 1883-86-ம் ஆண்டுகளில் ஆங்கிலேய பொறியாளர் கலோனல் ஜோகஸ்டட் காவிரி மற்றும் வெண்ணாற்றில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்தார். அதன் பின்னர் கல்லணைக்கால்வாய் வெட்டப்பட்டது. 1939-ல் ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் பல்வேறு புனரமைப்பு பணிகளை கல்லணையில் செய்தார்.
குறுவை பாசனத்திற்காக
கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடத்தில் ஏற்றி இறக்கும் வகையில் 110 இரும்பிலான ஷட்டர்கள் பொருத்தப்பட்டன. முன் காலத்தில் தண்ணீரை திறப்பதற்கு ஷட்டர்களை ஆட்களை கொண்டு மேலே ஏற்றவும், இறக்கவும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது கல்லணையில் உள்ள அனைத்து ஆறுகளில் ஷட்டர்கள் மின்சாரத்தின் மூலம் இயங்குகின்றன.
குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். தண்ணீர் கல்லணைக்கு வந்தடைந்ததும் ஜூன் 16-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடுவது வழக்கம். கடந்த ஆண்டில் தண்ணீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது, கல்லணை 16-ந்தேதி திறக்கப்பட்டது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
நடப்பாண்டு மேட்டூரில் தற்போது நீர் இருப்பு 107 அடியாக உள்ளது. வானிலை ஆய்வாளர்களும் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று ெல்டா பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டால் காவிரி டெல்டா பாசன பகுதியில் 4½ லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் தாளடி மற்றும் சம்பா சாகுபடிகளும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை பகிர்ந்தளிக்கும் கல்லணையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் கடந்த காலங்களில் செய்யப்பட்டன.
சீரமைப்பு பணிகள் தீவிரம்
காவிரி மற்றும் வெண்ணாற்றில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஷட்டர்கள் புதிதாக கடந்த ஆண்டில் மாற்றப்பட்டன. நடப்பு ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் உள்ள 30 ஷட்டர்கள் புதிதாக மாற்றி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல மேட்டூர் அணை திறப்பை எதிர்பார்த்து பாலங்களில் புதிதாக வர்ணம் பூசும் பணிகள் நேற்றுமுன்தினம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கல்லணை பாலங்களில் உள்ள ராஜராஜசோழன், விவசாயி, அகத்தியர், கரிகாற்சோழன், காவேரி அம்மன் சிலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. மேட்டூர் அணை திறப்பை எதிர்பார்த்து கல்லணையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Related Tags :
Next Story