கணவன்-மனைவியை தாக்கிய 2 பேர் கைது
கணவன்-மனைவியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 41). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேலராமநல்லூர் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் சேர்ந்து கிடா வெட்டி சாமி கும்பிட்டுள்ளார். அப்போது கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் வேல்மணிகண்டன் (24) சாப்பிட வந்துள்ளார். பின்னர் குடிபோதையில் கறி சாப்பாடு சரியில்லை என வேல்மணிகண்டன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து சங்கர் அவரை சமாதானம் செய்து அனுப்பி உள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வேல்மணிகண்டன் மற்றும் அவரது அண்ணன் வீரமணிகண்டன் (26) ஆகியோர் சங்கர் வீட்டின் முன்பு வந்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதையடுத்து சங்கர், அவரது தந்தை மகாலிங்கம், மனைவி திருநிறைச்செல்வி ஆகியோரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவியை தாக்கிய வீரமணிகண்டன், வேல்மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story