சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை அபேஸ் மாற்றுத்திறனாளிக்கு போலீஸ் வலைவீச்சு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்த மாற்றுத்திறனாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்,
உதவித்தொகை
சேலம் கன்னங்குறிச்சி மீனாட்சியம்மன் நகரை சேர்ந்தவர் சுசீலா (வயது 70). இவர் நேற்று முன்தினம் டவுன் அருணாசல ஆசாரி தெருவில் உள்ள ஒரு வங்கிக்கு முதியோர் உதவித்தொகை வாங்குவதற்காக சென்றார். பின்னர் பணத்தை வாங்கிவிட்டு வெளியே வந்த அவரிடம் 50 வயதுடைய மாற்றுத்திறனாளி ஒருவர் நைசாக பேச்சு கொடுத்தார்.
அப்போது மூதாட்டியிடம் அவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வயதானவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பதாகவும், அதை தான் உங்களுக்கு வாங்கி தருவதாகவும் கூறினார். மேலும் அந்த நபர் சுசீலாவை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். இதையடுத்து மூதாட்டியை பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் இடத்தில் அமர வைத்தார்.
நகை அபேஸ்
அப்போது அந்த மர்ம நபர் சுசீலாவிடம் நகை அதிகமாக போட்டிருந்தால் அதிகாரிகள் உதவித்தொகை தரமாட்டார்கள் என்றார். அதைத்தொடர்ந்து மூதாட்டி தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி அந்த நபரிடம் கொடுத்தார். பின்னர் அந்த நபர் நகையை அபேஸ் செய்துவிட்டு வெள்ளை பேப்பரை மட்டும் சுருட்டி அவரிடம் வழங்கினார். இதை அவர் தனது பையில் போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் அந்த மர்மநபர் அங்கிருந்து நகையுடன் தப்பிச்சென்று விட்டார்.
இதனால் சந்தேகமடைந்த மூதாட்டி பையில் இருந்த பேப்பரை திறந்து பார்த்த போது அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நூதன திருட்டு குறித்து, அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் சுசீலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்து விட்டு தப்பிச்சென்ற மாற்றுத்திறனாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story