சமத்துவபுரத்தில் அனைத்து வீடுகளையும் பழுதுபார்க்க கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
சமத்துவபுரத்தில் அனைத்து வீடுகளையும் பழுதுபார்க்க கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி,
கெங்கவல்லி அருகே சமத்துவபுரத்தில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் பராமரிப்பிற்காக தமிழக அரசு எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நிலையில் சமத்துவபுரத்தில் பழுதடைந்த வீடுகளை பராமரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக தொகை வந்த நிலையில், அந்த பகுதி மக்கள் சரியாக ஆய்வு செய்து நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே நேற்று காலை 42 வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் வேலை செய்ய வரும்போது, மற்ற வீட்டின் உரிமையாளர்கள் அனைத்து வீட்டிற்கும் பணம் ஒதுக்கிய பின்பு தான் வேலையை தொடங்க வேண்டும் என்று கூறி, திருச்சி-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவருக்கும் ஒரே மாதிரியாக நிதி ஒதுக்கப்படும் என்றும், ஒவ்வொரு வீடாக ஆய்வு செய்த பின்பு நிதி வழங்கப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story