தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 May 2022 2:41 AM IST (Updated: 13 May 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய்  பணி 
நாமக்கல் நகராட்சி 32-வது வார்டு ஜி.எம்.கே. நகரில் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. அதில் மண் சரிந்து அடைத்து கொண்டது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து  பாதியில் நிறுத்தப்பட்ட சாக்கடை கால்வாய் பணியை தொடங்க வேண்டும்.
-ஜி.எம்.கே. நகர் மக்கள், நாமக்கல்.
===

குண்டும், குழியுமான சாலை 
சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஆண்டிப்பட்டியில் இருந்து ரெயில்வே பாதை வழியாக சிவதாபுரம் செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அந்த வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த சாலையில் ஆங்காங்கே சில இடங்களில் பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-திவாகர், ஆண்டிப்பட்டி, சேலம்.
===
ஆக்கிரமிக்கப்பட்ட சாலை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் சாலைளை ஆங்காங்கே ஆக்கிரமித்துள்ளனர். சாலையின் இருபுறமும் வியாபாரிகள் தள்ளுவண்டிகளிலும், இருசக்கர வாகனங்களிலும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடந்து செல்பவர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து இதனை சரிசெய்ய வேண்டும்.
-தங்கேவல், குமாரபாளையம், நாமக்கல்.
===
சாக்கடை கால்வாயில் அடைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 2-வது பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.  6 மாதங்களாக  தூர்வாரப்படாமல் இருப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? 
-தாரணி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.
===
நோய் பரவும் அபாயம்
தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை ஏரி கரையில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஜினி, கம்பை நல்லூர், தர்மபுரி.
===
வீணாகும் குடிநீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ராமநாதன் நகரில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் அதிக அளவில் தண்ணீர்  வெளியேறி வீணாகிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்து தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 
-வெற்றிவேல், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.
===
சாலை சீரமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் வீரபாண்டி பெருமாம்பட்டி பகுதியில் மேட்டூர் குடிநீர் குழாய் அமைக்கும் போது சாலைகள் தோண்டப்பட்டது. பணி முடிந்த பின் சாலைகள் மீண்டும் சரியாக போடப்படவில்லை. இதனால் இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்வதற்கு சிரமமாக உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
-சோமு, பெருமாம்பட்டி, சேலம்.
====
பயன்படாத குடிநீர் தொட்டி
சேலம் மாநகராட்சி 19-வது வார்டு சூரமங்கலம் ஜலால் தெருவில் சுமார் பல ஆண்டுகளுக்கு முன்பாக மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மின் மோட்டார் இயங்காமல் பழுதடைந்து உள்ளது. இதனால் மக்கள் போதிய தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் மோட்டாரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலாஜி, சூரமங்கலம், சேலம்.

Next Story