பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்; பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இட ஒதுக்கீடு
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து ஆராய வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வது தொடர்பாக ஆணையத்தை அமைத்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் இதுகுறித்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த விஷயத்தில் எடுக்க வேண்டிய முடிவு மற்றும் சாதக-பாதகங்கள் குறித்து விவாதித்து தீர்மானிக்கப்படும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அரசியல் சாசனப்படி பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு.
மறு ஆய்வு மனு
மத்திய பிரதேச அரசு, ஒரு ஆணையத்தை அமைத்து அறிக்கை பெற்று அதை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி அந்த மாநில அரசு அங்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் உள்ளன. அதை பயன்படுத்தி கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நிலை என்ன என்பது குறித்து மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் சரியான புள்ளி விவரங்களை தயாரித்து அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். சுப்ரீம் கோர்ட்டு முன்பு வழங்கிய தீர்ப்பை பின்பற்றுகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு தீர்ப்பு வந்துள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story