பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு - சட்டத்துறை மந்திரி மாதுசாமி பேட்டி


பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு - சட்டத்துறை மந்திரி மாதுசாமி பேட்டி
x
தினத்தந்தி 13 May 2022 2:55 AM IST (Updated: 13 May 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை மந்திரி மாதுசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டத்துறை மந்திாி மாதுசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மறு ஆய்வு மனு

  உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தினேன். கர்நாடகத்தில் 51 கிராம பஞ்சாயத்துகள் டவுன் பஞ்சாயத்துகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அங்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது கடினம். அதனால் இதை தொடர அனுமதி வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் கேட்போம். 3 மாதங்கள் காலஅவகாசம் கேட்க திட்டமிட்டுள்ளோம்.

  பெங்களூரு மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் தேர்தலை நடத்த அரசு விரும்பவில்லை. பின்தங்கிய சமூங்களின் நிலை குறித்து ஆராய ஒரு ஆணையத்தை அமைத்துள்ளோம். அந்த குழு உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை வழங்கும். அதனால் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம்.

இறுதி முடிவு

  இதற்கிடையே பெங்களூரு மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்கள் மீது வருகிற 17-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. அங்கு கோர்ட்டு என்ன சொல்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் மாநில அரசு ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும்.
  இவ்வாறு மாதுசாமி கூறினார்.

Next Story