கர்நாடகத்தில் மதமாற்ற தடைக்கு அவசர சட்டம்; மந்திரிசபை கூட்டத்தில் முடிவு


கர்நாடகத்தில் மதமாற்ற தடைக்கு அவசர சட்டம்; மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
x

மேல்-சபையில் ஒப்புதல் கிடைக்காததால் கர்நாடகத்தில் மதமாற்ற தடைக்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:
  
ரூ.100 கோடி நிதி

  கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் பீனியா தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.862 கோடியில் கிடங்குகளை கட்டி வருகிறோம். ஆனால் இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அவற்றுக்கு மேலும் ரூ.176 கோடியை ஒதுக்க தீர்மானித்துள்ளோம். தலைமை செயலாளர் ரவிக்குமார் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை செயலாளரை நியமிக்கும் அதிகாரம் முதல்-மந்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது. பணி மூப்பு பட்டியலில் 9 அதிகாரிகளின் பெயர் உள்ளது. அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அவசர சட்டம்

  தலசீமியா நோய்க்கான மருந்து வாங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலுக்கு மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம். வலுக்கட்டாயமாக நடைபெறும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் மதமாற்ற தடை சட்டத்திற்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் மேல்-சபையில் அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளோம்.

  கர்நாடக சைபர் பாதுகாப்பு கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவுக்கு அனுமதி அளித்துள்ளோம். ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதியில் ரூ.28 கோடியில் ஓட்டுனர் மற்றும் மெக்கானிக் பயிற்சி மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அமைக்கப்படுகிறது.

பாதாள சாக்கடை

  மத்திய அரசின் அடல் நகர் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள ரூ.9,327 கோடியில் 287 நகரங்களில் அமல்படுத்தப்படுகின்றன. இதில் கர்நாடக அரசின் பங்குத்தொகை ரூ.3,692 கோடி ஆகும். உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு ரூ.923 கோடி ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில் பாதாள சாக்கடை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

  தூய்மை பாரதம் திட்டத்தில் அனைத்து நகரங்களிலும் ரூ.3,966 கோடியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெங்களூரு பழைய விமான நிலையம் முதல் வர்த்தூர் கோடி வழியாக ஹோப்பாரம் சந்திப்பு வரை சிக்னல் இல்லாத சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு

  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் செய்வதற்கான இடம் ஒதுக்கீட்டில் அரசால் வழங்கப்படும் மானியம் 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த ரூ.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் நகரசபைகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் ஒரு ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் வீடுகளை கட்டி கொள்ளலாம். இதற்கு அனுமதி பெற தேவை இல்லை. ஆனால் லே-அவுட்டுகள் அமைக்க உரிய அனுமதி பெற வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
  இவ்வாறு மாதுசாமி கூறினார்.


Next Story