‘பஸ் வசதி இல்லாததால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள்’ சாலைமறியலில் ஈடுபட்ட மலைக்கிராமத்தினர் அதிர்ச்சி புகார்
தலைவாசல் அருகே பஸ், சாலை வசதி இல்லாததால் எங்கள் ஊர் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என்று சாலைமறியலில் ஈடுபட்ட மலைக்கிராம பெண்கள் புகார் தெரிவித்தனர்.
தலைவாசல்,
சாலைமறியல்
தலைவாசல் அடுத்து மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனிடையே இந்த ஊராட்சிக்கு உட்பட்ட முட்டல் நடுநிலைப்பள்ளி எதிரில் மண் சாலையில் அமர்ந்து பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டும் என கோஷமிட்டனர்.
பெண் கொடுக்க மறுக்கிறார்கள்
இது குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் மறியலில் ஈடுபட்ட பெண்கள் அதிர்ச்சி அளிக்கும் புகாரை கூறினர். அவர்கள், எங்கள் ஊருக்கு பஸ், சாலை வசதி இல்லாததால் எங்கள் கிராமத்து வாலிபர்களுக்கு பெண் கொடுக்க மறுத்து வருகிறார்கள். அதனால் எங்கள் ஊர் வாலிபர்களுக்கு பெண் கிடைப்பது அரிதாக இருக்கிறது என்று மறியலில் ஈடுபட்ட பெண்கள் முறையிட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உதவி கலெக்டர் சரண்யா உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.