பேராயர், ஆட்சி மன்ற தேர்தலை ஒன்றுபட்டு நடத்த வேண்டும்
பேராயர், ஆட்சி மன்ற தேர்தலை ஒன்றுபட்டு நடத்த வேண்டும் என்று ஆயர்கள் பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருச்சி:
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (டி.இ.எல்.சி.) தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 125 குருசேகரங்களுடன் செயல்பட்டு வருகிறது. இத்திருச்சபைக்கு பேராயர் தேர்தலை வருகிற 27, 28 மற்றும் 30-ந் தேதிகளில் நடத்த ஒரு தரப்பினர் அறிவித்தனர். இந்த நிலையில் 54 குருசேகரங்களை சேர்ந்த ஆயர்கள் பேரவை நிர்வாகிகள் ஜான்சன் மான்சிங், அசோக்குமார், தாமஸ் மற்றும் அருள்சந்திரன் ஆகியோர் நேற்று திருச்சி டி.இ.எல்.சி. தூய திரித்துவ பேராலய வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேராயர் ஓய்வு பெற்று விட்டார் என்று ஒரு தரப்பும், ஆட்சி மன்றம் ஓய்வு பெற்றுவிட்டது என்று மற்றொரு தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் வசைபாடி அதிகார போட்டியில் உள்ளது. இந்த சீர்கேடான நிலை எங்களுக்கு மனவேதனையை அளிக்கிறது. பேராயர் ஓய்வு பெறும் வயது 65-ல் இருந்து 67 ஆக உயர்த்தப்பட்டது. இது பேராயருக்கு மட்டுமல்ல, ஆயர்களாகிய எங்களுக்கும்தான். ஆகவே, புதிய பேராயர் வெற்றி பெற்று பதவி ஏற்கும் வரை ஏற்கனவே பதவியில் உள்ளவர் அப்பணியை தொடர்ந்துதான் ஆக வேண்டும். எனவே, திருச்சபை சட்ட விதிப்படி, 14-ம் பேராயர் தேர்தல் மற்றும் ஆட்சி மன்ற தேர்தல் (2022-2025) ஆகிய இரண்டையும் பேராயரும், ஆட்சி மன்றமும் ஒன்றுபட்டு நடத்த ஆயர்களாகிய நாங்கள் விரும்புகிறோம். மிகவும் பழமையான திருச்சபை அதிகார போட்டியாலும், கவுரவ பிரச்சினையாலும், கோர்ட்டு வழக்காலும் நிலைகுலைய செய்யாமல் ஒரு சமாதான திருச்சபையாக மாற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story