தூத்துக்குடி மாவட்டத்தில் 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைதான 6 பேர் வெள்ளிக்கிழமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைதான 6 பேர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை காட்டுப்பகுதியில் வைத்து மதன் என்ற மதன்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில், ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த சக்ரியாஸ் மகன் லயோ (வயது 31), காயல்பட்டினம் சிங்கிதுறையை சேர்ந்த பொன்னுசாமி மகன் முத்து மல்லையாராஜ் என்ற மல்லையாராஜ் (36), தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த தாமஸ் மகன் ஆர்க் என்ற மரிய அந்தோணிராஜ் (29), ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த தொம்மை மகன் ராஜா (27), செபஸ்தியான் மகன் ஜாக்சன் (26) ஆகிய 5 பேரை திருச்செந்தூர் போலீசார் கைது செய்தனர். இதே போன்று திருச்செந்தூர் சோலைகுடியிருப்பை சேர்ந்த பிரமுத்து மகன் வைகுண்டராமன் என்ற ராஜேந்திரன் (34) என்பவரை கொலை முயற்சி வழக்கில் திருச்செந்தூர் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயலில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் லயோ, முத்து மல்லையாராஜ் என்ற மல்லையாராஜ், ஆர்க் என்ற மரிய அந்தோணி ராஜ், ராஜா, ஜாக்சன், வைகுண்டராமன் என்ற ராஜேந்திரன் ஆகிய 6 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட 95 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story