வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
போடிப்பட்டி, மே.14-
உடுமலை கோமதி நகரைச்சேர்ந்தவர் சலீம். இவருடைய வீட்டில் உபயோகமில்லாத தட்டு முட்டு சாமான்களை ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அந்த அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கட்டிலில் பாம்பு ஒன்று படுத்திருப்பதைப்பார்த்ததும் அலறியடித்து ஓடினர். உடனடியாக உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க தன்னார்வலர் லட்சுமணன் வந்து அந்த பாம்பை பிடித்துச்சென்றார். பிடிப்பட்ட பாம்பு நாகப்பாம்பு என்பது தெரியவந்தது. அதனை வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்பகுதியில் விடுவித்தனர். ‘வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் குளிர்ச்சி தேடியும், கனமழைக்காலங்களில் பாதுகாப்பு தேடியும், சில நேரங்களில் இரை தேடியும் வீடுகளுக்குள் பாம்புகள் நுழையக்கூடும். எனவே வீடுகளுக்குள்ளும் வீட்டைச்சுற்றியும் தேவையற்ற பொருட்கள் மற்றும் புதர்ச்செடிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். மேலும் பாம்பு இருப்பது தெரிய வந்தால் அதனைத்தொந்தரவு செய்யாமல் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story