பலத்த காற்றில் வாழை இலைகள் சேதம் விவசாயிகள் கவலை
கடையநல்லூர் அருேக, பலத்த காற்றினால் வாழை இலைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருேக, பலத்த காற்றினால் வாழை இலைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாழை பயிர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான அச்சன்புதூர், காசிதர்மம், இலத்தூர், நெடுவயல், வடகரை, சிவராமபேட்டை, பண்பொழி, இடைகால், ஆய்க்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் வாழைகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
வாழை மரங்கள் வளர்ச்சி 10 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். 5 மாதத்தில் இருந்து இலைகள் எடுக்கலாம். தற்போது இப்பகுதியில் வாழை மரங்கள் 5 முதல் 10 மாதங்கள் வரை வளர்ச்சியுடன் உள்ளன.
பலத்த காற்று
இந்தநிலையில் தற்போது `அசானி' புயல் காரணமாக தொடங்கி உள்ள தென்மேற்கு பருவக்காற்று வாழை மரங்களில் இலைகளை சேதப்படுத்துவதுடன், மரங்களையும் சாய்த்து வருகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் அறுவடை செய்த வாழைத்தார்கள், இலைகளுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளில் தற்போது இரண்டு நாட்களுக்கு மேலாக வீசிவரும் `அசானி' புயல் காற்றால் வாழைகளில் இலைகள் கிழிந்து சேதமாகி வருகின்றன. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் வேதனை
இதுகுறித்து இலத்தூர் வாழை விவசாயி பரமசிவன் கூறியதாவது:-
இந்த பகுதியில் வாழ்வாதாரமே வாழைகள் தான். வரும் வைகாசி மாதங்களில் முகூர்த்த தினங்கள் வருவதால் வாழை இலைகள் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் வைகாசி மாதத்திற்கு முன்னரே காற்று வீசியதால் வாழை இலைகள் கிழிந்து சேதமானதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்-அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story