ஊட்டியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


ஊட்டியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 13 May 2022 8:01 PM IST (Updated: 13 May 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டிக்கு வருவதையொட்டி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வாகன ஒத்திகை நடந்தது.

ஊட்டி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டிக்கு வருவதையொட்டி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வாகன ஒத்திகை நடந்தது.

துணை ஜனாதிபதி வருகை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசுகிறார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவியும் வருகிறார். இதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை(சனிக்கிழமை) டெல்லியில் இருந்து கோவைக்கு வருகிறாா். தொடர்ந்து நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வருகிறாா்.  

பின்னர் அங்கு காலை 11 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். முன்னதாக குன்னூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் ராஜ்பவனுக்கு செல்கிறார். அங்கு மதிய உணவுக்கு பிறகு மாலை 3 மணியளவில் லாரன்ஸ் பள்ளிக்கு செல்கிறார். 

3 அடுக்கு பாதுகாப்பு

தீட்டுக்கல் தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ராஜ்பவன் செல்வதையொட்டி நேற்று போலீசார் பாதுகாப்பு வாகன ஒத்திகையில் ஈடுபட்டனர். அதன்படி ஊட்டி தீட்டுக்கல் தளத்தில் இருந்து படகு இல்ல சந்திப்பு, கலெக்டர் அலுவலக சாலை வழியாக இன்று காலை 11 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. 

வாகனங்கள் சென்ற வழி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மற்ற சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.


Next Story