வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது
வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது
கூடலூர்
கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது.
கண்காட்சி மற்றும் கோடை விழா
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 9-வது வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா, தனியார் பள்ளிக்கூட மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. கண்காட்சி நுழைவுவாயில் அரங்கை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் வாசனை திரவிய பொருட்களை கொண்டு காளை மாடுகள் மூலம் வயலில் உழவு செய்யும் உழவன், வயலில் களை எடுக்கும் பெண் ஆகிய அலங்காரம் கொண்ட அரங்கை திறந்து வைத்தார். தொடர்ந்து கலெக்டர் அம்ரித் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு அரங்குகளை திறந்து வைத்தனர். தொடர்ந்து கோடை விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், நகராட்சி தலைவர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் வரவேற்றார்.
கண்கவர் அலங்காரங்கள்
இதையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், தோட்டக்கலை இணை இயக்குனர் ஷபிலா மேரி, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி, நகராட்சி துணைத்தலைவர் சிவராஜ், ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் தாசில்தார் சித்ராஜ் நன்றி கூறினார்.
இந்த கண்காட்சியில் வெந்தயம் 15 கிலோ, கசகசா 12 கிலோ, கிராம்பு-பட்டை தலா 5 கிலோ, ஏலக்காய், மல்லி, சீரகம், குறுமிளகு தலா 4 கிலோ, மிளகாய் விதை 6 கிலோ உள்பட மொத்தம் 16 வகையான 75 கிலோ வாசனை திரவியங்கள் மூலம் விவசாயி உழவு செய்வது, யானை, பச்சை தேயிலை பறிக்கும் பழங்குடியின பெண், கண்கவர் அலங்கார வளைவு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அரங்குகள்
மேலும் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கக்கூடிய குப்பை கழிவுகளை கொண்டு குழந்தைகளை கவரும் வகையில் டிராகன், ரெயில் ஆகியவை வடிவமைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து வனத்துறை சார்பில் வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள், இயற்கை நீரூற்று, அரிய வகை தாவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது.
மேலும் உன்னி செடிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட யானை உள்ளிட்ட வடிவங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது. இது தவிர பல்வேறு துறைகள், சமூக நல அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர். தொடர்ந்து நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) வரை கண்காட்சி, கோடை விழா நடக்கிறது.
Related Tags :
Next Story