ஆம்னி பஸ் நிலையத்தில் கடை உரிமையாளர்கள் போராட்டம்


ஆம்னி பஸ் நிலையத்தில் கடை உரிமையாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 May 2022 8:38 PM IST (Updated: 13 May 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

வைப்பு தொகையை திருப்பிதரக்கோரி ஆம்னி பஸ் நிலையத்தில் கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, மே.14-
வைப்பு தொகையை திருப்பிதரக்கோரி ஆம்னி பஸ் நிலையத்தில் கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி செய்ய உத்தரவு
திருச்சி பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே தெற்கு ரெயில்வேக்கு சொந்தமான இடம் உள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு அந்த இடத்தை ஒப்பந்தம் அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஆம்னி பஸ் நிலையம் இயங்கி வந்தது.
கடந்த மாதம் 30-ந்தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பஸ் நிலைய வளாகத்தில் இயங்கி வந்த கடைகளை ரெயில்வே நிர்வாகம் காலி செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்தநிலையில்  நேற்று காலையில் அங்கு கடை வைத்திருந்த கடை உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகள் சேதம்
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர்கள் கூறுகையில், அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்த ஒப்பந்தாரரிடம் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை கடை நடத்துவதற்கு பாதுகாப்பு வைப்பு தொகை கொடுத்துள்ளோம். இந்த தொகையை திரும்பி தர வேண்டும். ஒப்பந்ததாரர் வெறும் மேற்கூரை மட்டுமே அமைத்துக் கொடுத்தார். சுற்றுச் சுவர், தரைத்தளம், தண்ணீர் குழாய் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் எங்களது சொந்தச் செலவில் செய்து கொண்டோம். இந்நிலையில் புதிய ஒப்பந்ததாரர் விதித்த கெடு முடிவடைந்ததை தொடர்ந்து கடைகளை காலி செய்யுமாறு கூறிகின்றனர். மேலும் கடைகளை அடித்து உடைத்து சேதப்படுத்துகின்றனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளோம் என்றனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார், ரெயில் பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் இன்றும் பேச்சுவார்த்தை தொடரும் என்று கடை உரிமையாளர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story