பள்ளி வளாகத்தில் நல மையம் அமைக்க எதிர்ப்பு


பள்ளி வளாகத்தில் நல மையம் அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 May 2022 9:23 PM IST (Updated: 13 May 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

சத்துவாச்சாரியில் பள்ளி வளாகத்தில் நல மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி, நேருநகரில் நல மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக நேருநகரில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இதற்கு பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பள்ளி வளாகத்தில் ஏற்கனவே போதுமான இடவசதி இல்லை. கூடுதல் வகுப்பறை கட்டுவதற்குக் கூட இடம் இல்லாத நிலை உள்ளது. மாணவர்கள் விளையாடக்கூடிய இடத்தில் நலமையம்  கட்டக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும் அங்கு வந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அருகில் உள்ள மற்றொரு இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் மண்டலத்துக்கு 5 இடங்களில் என மொத்தம் 20 இடங்களில் நல மையம் அமைய உள்ளது. இந்த மையத்தில் யோகா உள்ளிட்ட உடல்நலம் சார்ந்த நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு மையம் அமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Next Story