கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்


கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 13 May 2022 9:41 PM IST (Updated: 13 May 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி குடியாத்தத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

குடியாத்தம்

கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி குடியாத்தத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்டம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில்  தேர் திருவிழாவும், கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெற உள்ளது. கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கடந்த வாரம் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பணிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார்.  அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் சவுந்தரராசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கலந்துகொண்டார்.

கூட்டத்திற்கு பிறகு அவர் கூறியதாவது:-

போக்குவரத்து மாற்றம்

கெங்கையம்மன் தேர், சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 200 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோவில் உள்ளேயும், வெளியேயும் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூட்டத்தை கண்காணிக்கப்படும்.

தேர் செல்லும் பகுதியில் உள்ள மின் வயர்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவிழா நடைபெற உள்ள இரண்டு நாட்களில் கனரக வாகனங்கள் குடியாத்தம் நகருக்குள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டு, மாற்று வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நெரிசலை குறைக்கும் வகையில் வேலூர் மற்றும் சித்தூரில் இருந்து வரும் பஸ்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், மேல்பட்டி, ஆம்பூர் வழியாக வரும் பஸ்கள் செருவங்கி பகுதியிலுள்ள தியேட்டர் அருகிலும், பேரணாம்பட்டு பகுதியிலிருந்து வரும் பஸ்கள் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தம்

வெளியூரிலிருந்து சொந்த வாகனங்களில் திருவிழாவுக்கு வருபவர்கள் நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு முன்னதாகவே வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர், சித்தூர் பகுதியில் இருந்து வருபவர்களின் வாகனங்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், ஆம்பூர் மற்றும் பேரணாம்பட்டு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் என்.எஸ்.கே. நகர் மைதானத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 அங்கிருந்து கோவிலுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் செல்பவர்கள் ஆட்டோக்கள் மூலம் செல்லலாம். கெங்கையம்மன் கோவில் அருகே 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் வாகனங்கள் நிறுத்தப்படும். நகரின் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். கூட்டத்தில் நகை திருடும் நபர்களை கண்காணித்து பிடிக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன், வனவர் மாசிலாமணி, அரசு வழக்கறிஞர் விஜயகுமார், நகரமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ மோகன், என்.கோவிந்தராஜ், நவீன்சங்கர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story