தமிழகத்தில் தக்காளி வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை


தமிழகத்தில் தக்காளி வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை
x
தமிழகத்தில் தக்காளி வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை
தினத்தந்தி 13 May 2022 10:11 PM IST (Updated: 13 May 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தக்காளி வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை

கோவை

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் புதிய கொரோனா ஐ.சி.யூ. பிரிவு, குழந்தைகளுக்கான ஐ.சி.யூ. பிரிவு, இருதய நோய் பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அங்கிருக்கும் வசதிகள், தேவைகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் ஆய்வின் போது நோயாளிகள், அவர்களின் உறவினர்களிடம் கோரிக்கைகள் குறித்தும், ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் சுகாதாரத் துறைக்கு என 17 தலைப்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. ஜெய்க்கா திட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உடன், தீக்காய சிகிச்சை பிரிவு, குடல்நோய் துறை, நரம்பியல் துறை, எலும்பியல் துறை போன்ற துறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு 32  நவீன வசதிகள் கொண்ட  ஐ.சி.யூ படுக்கைகள் அமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 100-க்கு கீழே பதிவாகி வருகிறது. கடல் கொந்தளிப்பு போல் இருந்த மூன்று அலையை நாம் தாண்டி விட்டோம். கரை ஒதுங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. 3-ம் அலை பல்வேறு விழிப்புணர்வு மூலம் தடுக்கப்பட்டது.

 ஒருசில நாடுகளில் கொரோனா தாக்கம் இன்னும் ஓயவில்லை.
டெல்லியில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 1.29 கோடி பேர் உள்ளனர். 45 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்தாமல் 10 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தக்காளி காய்ச்சல்
சவர்மா உணவு பிரச்சினையில் நன்றாக சமைத்த எந்த உணவையும் தடை செய்ய முடியாது. பழங்கள் வாங்கும் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.கேரளாவில் தக்காளி காய்ச்சல் குறித்து அரசின் செயலாளரிடம் இன்று (நேற்று) பேசினோம். இதற்கான விளக்கம் அவர்கள் அளித்துள்ளனர்.
இது சாதாரண நோய். இதை கொரோனா போல பீதி கிளப்ப வேண்டிய தேவையில்லை. தமிழகத்தில் தக்காளி வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் தமிழக-கேரள எல்லையில் அமைந்து உள்ள 13 மாவட்டங்கள் கண்காணிக்கப்படும். ஊட்டி பழங்குடியின மாணவர்கள் தடுப்பூசி போட பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர். பழங்குடியினர் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு விட்டனர். கோவை அரசு ஆஸ்பத்திரி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்குவதை கலெக்டர் முடிவு செய்வார்.
 இவ்வாறு அவர் கூறினார்.


Next Story