வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
உப்புக்கோட்டை:
சித்திரை திருவிழா
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், ஆயிரங்கண் பானை எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்றும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதே போன்று நூற்றுக்கணக்கான திருநங்கைகளும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டம்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடந்தது. தேரோட்டத்தையொட்டி யாழி பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன. பின்னர், கவுமாரியம்மன் உற்சவசிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தேருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் எழுந்தருளினார். அதன் பின்னர் தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர், மூலவர் சன்னதிக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் தேரை பக்தர்கள் தொட்டு வணங்கினர்.
பாதுகாப்பு
பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, கோவில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மூலவர் சன்னதியில் நிறுத்தப்பட்ட தேர் 16-ந்தேதி (திங்கட்கிழமை) ரதவீதிகளில் சுற்றி விட்டு நிலைக்கு வருகிறது. தொடர்ந்து 17-ந்தேதி ஊர் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story