நூல் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட காடா ஜவுளி துணி விற்பனை விற்பனை ஆகாததால் 100 கோடி துணிகள் தேக்கம்
நூல் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட காடா ஜவுளி துணி விற்பனை விற்பனை ஆகாததால் 100 கோடி துணிகள் தேக்கம்
பல்லடம்
பல்லடம் பகுதியில் நூல் விலை உயர்வு மற்றும், உற்பத்தி செய்யப்பட்ட காடா ஜவுளி துணி விற்பனையாகாததால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான ஜவுளி துணி தேக்கம். திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரண்டரை லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கடந்த வருடங்களில் கொரோனா பொதுமுடக்கத்தால் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கனவே உற்பத்தி செய்த துணிகளை அனுப்ப முடியாததால் ரூபாய் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்தது. ஏற்கனவே வட மாநிலங்களுக்கு அனுப்பிய காடா துணிகளுக்கு அங்குள்ள துணி மொத்த வர்த்தகர்கள் அதற்குரிய தொகையை அனுப்ப முடியாத அளவிற்கு வட மாநிலங்களில் கொரோனா தாக்கம் முன்பு இருந்ததால் அவர்களிடமிருந்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி துணி உற்பத்தியாளர்களுக்கு வர வேண்டிய தொகை இன்னும் ரூபாய் பல கோடி அளவிற்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது நூல் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. துணி மொத்த வியாபாரிகள் கேட்ட விலைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு அதன்படி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் துணி தேக்கம் குறைந்து வருகிறது. அதே சமயம் ஜவுளி உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைவது அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் பல ஜவுளி உற்பத்தியாளர்கள் தொழிலை கைவிட்டு செல்லும் நிலை ஏற்படும்.பல்லடம் பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.இது குறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது.திருப்பூர் கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது, போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது, கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கால் காட ஜவுளி தொழில் முற்றிலும் முடங்கியது, மத்திய, மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பால், சற்றே விசைத்தறி தொழில் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருந்தது. கொரோனா 2ம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி மீண்டும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தமிழகத்தில் இருந்து ஜவுளிகள் அதிகமாக ஏற்றுமதியாகும் குஜராத், மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வடமாநில மொத்த ஜவுளி வியாபாரிகள், ஏற்கனவே துணி ஆர்டர் கொடுத்து தயார் நிலையில் இருந்த காடா துணிகளை அனுப்ப வேண்டாம் என்றும், புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்தும், ஏற்கனவே ஆர்டர் கொடுத்து பெற்ற துணிகளுக்கு, இது வரை பணம் அனுப்பாமலும் உள்ளனர். இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டோம். எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் துணி ரகங்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்க வேண்டும். ஆன்லைன் என்னும் இணையதள வர்த்தகத்தில் இருந்து பஞ்சுவை நீக்க வேண்டும்.வெளிமாநிலங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்து எடுத்து வரவேண்டியது உள்ளது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.துணி உற்பத்திக்கான மூலதன பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் கொரோனா பொதுமுடக்கம் மற்றும் நூல் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறி ஜவுளி தொழிலை பாதுகாக்க அரசு இத்தொழில் துறையினருக்கு தேவையான உதவிகள், சலுகைகள் அளித்து காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நூல் விலை வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 20 கவுண்ட் ரகம் (வார்ப்பு) ஒரு கிலோ நூல் விலை கடந்த பிப்ரவரி மாதம் ரூ.130 ரூ.140 ஆக இருந்தது. அதன் பின்னர் மார்ச் மாதம் ரூ.160 ரூ.170 ஆக இருந்தது. தற்போது மே மாதம் ரூ.220 ஆக மிக கடுமையாக விலை உயர்ந்துள்ளது. கழிவு பஞ்சு விலை உயர்ந்து விட்டதால் தான் நூல் விலையை உயர்த்த வேண்டியதாகி விட்டது என்று ஒ.இ.மில் நிர்வாகத்தினர் தரப்பில் கூறுகின்றனர். நூல் விலை உயர காரணம் சீனாவில் மின்சார பற்றாக்குறை, நிலக்கரி பிரச்சனை ஆகியவற்றால் சர்வதேச நாடுகளுக்கு சீனாவின் துணி ரகங்கள் வருவதில்லை. அதனால் வியாட்நாம், இந்தோணிசியா, ஐரோப்பியா போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பஞ்சு, நூல் போன்ற மூலப்பொருட்கள் ஏற்றுமதியாகிறது. அதனால் நமது நாட்டில் எந்த விலை கொடுத்தாலும் உடனே நூல் கிடைப்பதில்லை. முன் பணம் கட்டி ஆர்டர் செய்தால் தான் 10 நாட்கள் கடந்த பின்னர் நூல் கிடைக்கும் என்ற நிலை தற்போது நிலவுகிறது. இந்தியாவில் இருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யாமல் மதிப்புக்கூட்டு பொருட்களாக தயாரித்து அனுப்பினால் கூடுதலாக அன்னியசெலவாணி கிடைக்கும். தீபாவளி பண்டிகைக்கு முன்பு 20 கவுன்ட் 63 இஞ்ச் காடா துணி ஒரு மீட்டர் ரூ.50க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. நூல் விலை உயர்வுக்கு பின்னர் துணி உற்பத்தி அடக்க விலை ஒரு மீட்டர் ரூ.64 ஆகிறது. ஆனால் துணி மொத்த வியாபாரிகள் ரூ.58க்கு தான் கேட்கின்றனர். அதே போல் 55 இஞ்சு துணி அடக்க விலை ஒரு மீட்டர் ரூ.52 ஆகிறது. ஆனால் துணி மொத்த வியாபாரிகள் ரூ.47க்கு தான் கேட்கின்றனர். வேலை ஆட்களுக்கு சம்பளம் மற்றும் வங்கி கடன் மாத தவணை, பராமரிப்பு செலவு, மின் கட்டணம் உள்ளிட்டவைகளுக்காக நஷ்டத்திற்கு அடக்க விலையை விட குறைவாக பணம் வேண்டும் என்பதற்காக கிடங்கில் இருப்பு வைத்திருந்த துணிகளை மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். அதனால் கிடங்கில் துணி தேக்கம் குறைந்துள்ளது. அதே சமயம் எங்களது நஷ்டம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் பலர் ஜவுளி உற்பத்தி தொழிலை கைவிட்டு செல்லும் நிலை ஏற்படும்.
ஒ.இ.மில் உரிமையாளர்கள் விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் வகையில் கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு இருந்த நூல் விலையில் தற்போது விற்பனை செய்தால் ஜவுளி உற்பத்தி தொழிலை பாதுகாக்க முடியும் அதற்கு ஆவணம் செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.மத்திய அரசின் பஞ்சு சேமிப்பு கிடங்கில் இருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள பஞ்சுயை உள்நாட்டு தேவைக்கு மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். எப்போதும் உள்நாட்டு தேவை போக மீதம் ஆகும் உபரி பஞ்சு, நூல்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் மட்டும் ரூ.100 கோடி மதிப்பிலான விசைத்தறி துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. நூல் விலை கடும் உயர்வால் விசைத்தறி துணி உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். நூல் விலை உயர்வால் நஷ்டத்தை தவிர்க்க 15 நாள் பாதியாக துணி உற்பத்தி குறைப்பு செய்து வருகிறோம். இத்தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க விசைத்தறி தொழில் நிலைமை சீராகும் வரை ஜவுளி உற்பத்தியை முழுமையாக நிறுத்தம் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவோம். நூல் விலை உயர்வை கண்டித்தும் கட்டுபடுத்த வலியுறுத்தியும் வரும் 16, 17ம் தேதி திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்லடம் பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் 2 நாள் முழுமையாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
-------
Reporter : P. Arjunan Location : Tirupur - Palladam
Related Tags :
Next Story