பரங்கிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் முற்றுகை
பரங்கிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பெண்கள் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்
பரங்கிப்பேட்டை
முற்றுகை
விழுப்புரத்திலிருந்து கடலூர் வழியாக நாகப்பட்டினத்துக்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் அருகே உள்ள பெரியபட்டு முதல் சி.முட்லூர் வரை உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதிய தொகை வழங்கப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கத்தினர், கிராம மக்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து பெரியகுமட்டி மெயின் ரோட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு கட்டுமானப் பணிக்கான தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
60 பேர் கைது
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ் பாபு, விஜய், மாவட்ட குழு கற்பனை செல்வம், பெரியப்பட்டு வர்த்தக சங்கத் தலைவர் ஜெய்சங்கர், விவசாய சங்க மாவட்ட தலைவர் மாதவன் மற்றும் பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து முட்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story