ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பில் உக்கடம் குளம்
ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பில் உக்கடம் குளம்
கோவை
கோவை மாநகராட்சி பகுதியில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், உள்ளிட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களை ஆக்கிரமித்து வளர்ந்து இருந்த ஆகாய தாமரைகள் நவீன எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
மேலும் குளங்களின் கரைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. நடைபாதைகள், பூங்கா, சைக்கிள் செல்ல தனி பாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்கள் இயற்கை அழகை காணும் வகையில் காட்சி கோபுரங்கள், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் மீண்டும் ஆகாய தாமரைகள் வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்து விடுகின்றன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: -கோவை குளங்கள் ஸ்மார்ட் சிட்டியில் மேம்படுத்தப்படுவது முக்கியமான ஒன்றுதான். ஆனால் ஆகாய தாமரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் உள்ளது கவலை அளிக்கிறது. நீலகிரியில் ஊட்டி ஏரியில் வளரும் ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் தினமும் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் அங்கு மீண்டும் ஆகாய தாமரை வளராமல் தடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல் கேரளாவில் ஆகாய தாமரைகள் வளர்வதை கட்டுப்படுத்த சில தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
இதுபோல் கோவை மாநகராட்சி அதிகாரிகளும் குளங்களை ஆக்கிரமிக்கும் ஆகாய தாமரைகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் குளங்களை அழகுபடுத்தி எந்த ஒரு பயனும் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகு மிளிருது ஒரு புறம் ஆனால் மறுபுறம்ஆகாயத்தாமரையால் ஆபத்தான பிரச்சினையும் வளருது என்கிற அவல நிலையை போக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.
Related Tags :
Next Story