தரமற்ற விதைகள் விற்றால் சட்ட நடவடிக்கை


தரமற்ற விதைகள் விற்றால் சட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 13 May 2022 10:44 PM IST (Updated: 13 May 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் தரமற்ற விதைகள் விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி: 

மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் உள்ளது. இதனால், சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு விதை வினியோகஸ்தர்கள் மற்றும் விதை விற்பனையாளர்கள், விதை உற்பத்தியாளர்களிடம் இருந்து சான்று நிலை மற்றும் உண்மை நிலை விதைக் குவியல்கள் பெறப்பட்டவுடன் குவியல் வாரியாக விதை மாதிரி எடுத்து அனுப்பி, அவற்றின் முளைப்புத்திறனை அறிந்து அவற்றில் அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைகளை விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இதன் மூலம் விதைகளின் முளைப்புத்திறன் தொடர்பான பிரச்சினைகளை தவிர்க்கலாம். மேலும் அனைத்து விற்பனையாளர்களும் தங்கள் நிறுவனத்தில் விதை இருப்பு மற்றும் விலை விவர பட்டியல் வைக்க வேண்டும். விதை கொள்முதல் செய்ததற்கான கொள்முதல் பட்டியல் உண்மை நிலை, விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பிறமாநில ரக நெல் விதைகளுக்கான படிவம் மற்றும் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனரால் வழங்கப்பட்ட பதிவுச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை பட்டியல் ஆகிய சட்டப்பூர்வ ஆவணங்களை தவறாமல் பராமரிக்க வேண்டும். விதை வாங்கும் விவசாயிகளுக்கு உரிய படிவத்தில் விற்பனை பட்டியல், விவசாயிகளின் கையொப்பம் பெற்று வழங்கி அதன் நகலை பராமரிக்க வேண்டும். இவ்வாறு ஆவணங்கள், பதிவேடுகள் பராமரிக்காத மற்றும் தரமற்ற விதைகளை வினியோகம் செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story