மின்சார ரெயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவர்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மீது ஏறி முதியவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மீது ஏறி முதியவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சார ரெயில் மீது ஏறிய முதியவர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நள்ளிரவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 7-வது நடைமேடையில் நின்றிருந்த மின்சார ரெயில் மீது ஏறி நடந்து கொண்டிருப்பதாக அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு மின்சார ரெயில் மீது நடந்துகொண்டிருந்த நபரை கீழே இறங்குமாறு கூறி உள்ளனர். அதை ஏற்க மறுத்த அந்த நபர் மின்சார வயரை பிடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். சுதாரித்துக்கொண்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்க் அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தற்கொலைக்கு முயற்சி
உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மின்சார ரெயிலின் உயரழுத்த மின்சாரத்தை நிறுத்தினர். பின்னர் அந்த நபர் ரெயில் கூரை மீது இங்கும் அங்கும் ஓடத் தொடங்கினார். உடனே ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மகாலிங்கம், ஜித்தேந்திரா மீனா மற்றும் ரெயில்வே ஊழியர் பத்மநாபன் ஆகிய மூவரும் அந்த நபருக்கு தெரியாமல் மேலே ஏறி அவரை பிடிக்க சென்றனர்.
இதை பார்த்த அந்த நபர் ரெயிலில் இருந்து கீழே குதிக்க முயன்றார். உஷாரான போலீசார் 3 பேரும் அந்த நபரை பத்திரமாக பிடித்து கீழே இறக்கினர். சுமார் 3 மணி நேரம் போராடி அந்த நபரை மீட்டனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவரா?
பின்னர் அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் சில ஆவணங்கள் இருந்தன. தொடர்ந்து விசாரனை மேற்கொண்டதில் அவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா ஸ்ரீபுத்தூர் பகுதியை சார்ந்த இளங்கோவன் (வயது 68) என்பது தெரியவந்தது.
அவரை ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story