தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்
குடிநீர் வழங்க நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் தொட்டியில் முறையாக குடிப்பதற்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் கிராமபுற பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் முறையாக தொட்டியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், குருவராஜபேட்டை.
பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?
பேரணாம்பட்டு சாத்கர், போன்மில், கலைஞர் நகர், பத்ரபல்லி ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்கள் புத்துக்கோவில் பஸ் நிறுத்தத்துக்கு வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி ஆகிய ஊர்களுக்கு செல்கிறார்கள். அந்த நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மழை, வெயிலுக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லை. பல ஊர்களில் இருப்பதுபோல் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தருவார்களா?
-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.
மணல் திருட்டு
வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே பாலாற்றில் தினமும் இரவில் வாகனங்களில் மணல் திருடும் சம்பவம் நடந்து வருகிறது. இதுபற்றி மாவட்ட அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.
-ராஜமாணிக்கம், சேண்பாக்கம்.
பாலாற்றில் குப்பைகளை கொளுத்தும் அவலம்
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்றில் மர்ம நபர்கள் குப்பைகள், கட்டிட கழிவுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டுகிறார்கள். அங்குள்ள குப்பைகளில் சமூகவிரோதிகள் தீ வைப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
-மாலவன், வேலூர்.
நச்சுப்புகையால் சுவாச பிரச்சிைன
குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை 2-வது ஆண்டியப்ப ஆச்சாரி தெரு சந்திப்பில் கோவில் அருகில் குப்பைகளை மூட்டைக்கட்டி கொண்டு வந்து நடந்து செல்லும் பாதை ஓரம் வீசி தீ வைத்து விடுகின்றனர். அதில் இருந்து ெவளியேறும் நச்சுப்புகை அங்குள்ள மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. பாதை ஓரம் குப்பைகளை கொட்டுவதையும், அதற்கு தீ வைப்பதையும் தடுக்க வேண்டும்.
-கண்ணன், குடியாத்தம்.
சாய்ந்த மின்கம்பம்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் வந்தவாசி-காஞ்சீபுரம் மெயின் ரோட்டில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அதில் அதிகமாக கம்பிகள் உள்ளன. அதன் அருகில் ஒரு மரத்தின் கிளைகள் மின்கம்பி மீது முறிந்து விழும் அபாயம் உள்ளது. தற்போது அடிக்கடி சூறைக்காற்று வீசுவதால் மின்கம்பத்தால் எந்நேரம் ஆபத்து ஏற்படலாம். சாய்ந்த மின்கம்பத்தை அதிகாரிகள் நிமிர்த்தி ெசங்குத்தாக நட வேண்டும்.
-ஜாகீர், வெம்பாக்கம்.
சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை, பஸ் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 3 மாதங்களாக சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டிக்கிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் பயணிகள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
-மயில்வாகனன், நாட்டறம்பள்ளி.
குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு
ஆரணியில் காந்திரோடு உள்புறம் காய்கறி மார்க்கெட் அருகில் வண்டிமேடு பகுதி உள்ளது. அங்கு நகராட்சிக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. அங்கு பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பைகளும் அதிகமாக கிடக்கிறது. அங்கு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிப்பதில்லை. குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை ேசகரிக்குமா?
-ராகவேந்திரன், ஆரணி.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ஆரணி பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் வந்து செல்கிறார்கள். பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டண கழிவறையில் இருந்து வெளிேயறும் கழிவுநீர் செல்லும் கால்வாய் தூர்ந்துபோய் இருப்பதால், பஸ் நிலைய வளாகத்திலேயே வழிந்தோடுகிறது. பழைய பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை முன்பு கடந்த மாதம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அங்குள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் அனைத்தும் தண்ணீர் பந்தலில் உள்ள பானை வழியே வழிந்து ஓடுகிறது. நகராட்சி நிர்வாகம் கால்வாய்களை தூர்வார வேண்டும்.
-ராகவன், ஆரணி.
Related Tags :
Next Story