பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கும் குரங்குகள்


பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கும் குரங்குகள்
x
தினத்தந்தி 13 May 2022 11:29 PM IST (Updated: 13 May 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே பொதுமக்களை விரட்டி, விரட்டி குரங்குகள் கடித்து வருகின்றன.

கொள்ளிடம்
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் சாலையோரம் மந்தக்கரை என்ற இடத்தில், 2 குரங்குகள் அங்குள்ள மரங்களில் தங்கி அந்த வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை துரத்தி, துரத்தி கடித்து வருகின்றன. மேலும், பொதுமக்களையும் அவ்வப்போது கடித்து காயப்படுத்தி வருகிறது. சமீபத்தில் பள்ளி மாணவர் ஒருவரை இந்த குரங்குகள் கடித்தன. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகரன்(வயது 65) என்பவர் வீட்டிலிருந்து அருகில் உள்ள மந்தக்கரை பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
விவசாயி படுகாயம்
அப்போது அவர் மீது ஒரு குரங்கு பாய்ந்து அவரது இரண்டு கைகளையும் கடித்துக் குதறியது. இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சுற்றித்திரியும் 2 குரங்குகள் பொதுமக்களையும், கால்நடைகளையும் துரத்தி, துரத்தி கடித்து வருகின்றன. இதனால், அந்த மரத்தின் வழியாக செல்லவே அச்சமாக இருக்கிறது. ஆகவே, அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story