ரூ.20½ கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி
திருத்துறைப்பூண்டியில் ரூ.20½ கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் ரூ.20½ கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
போக்குவரத்து நெரிசல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் செல்பவர்கள், பட்டுக்கோட்டை செல்பவர்கள், நாகப்பட்டினம் செல்பவர்கள், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நகரத்தின் வழியாக செல்வதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
புறவழிச்சாலை அமைக்கும் பணி
இதை கருத்தில் கொண்டு திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணங்களால் அந்த பணி தொடங்கப்படவில்லை.
தற்போது மீண்டும் அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததால் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பூமி பூஜை
இந்த நிலையில் ரூ.20 கோடியே 40 லட்சம் மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. அதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏக்கள். மாரிமுத்து, பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், தி.மு.க. நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
அப்போது திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் வேலூர் பாலம் அருகில் இருந்து புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடக்கப்பட்டு, நாகை கிழக்கு கடற்கரை சாலையில் முடிவடைகிறது. இந்த பணி ஒரு ஆண்டுக்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story