பேளுக்குறிச்சி அருகே, திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பேளுக்குறிச்சி அருகே, திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேந்தமங்கலம்:
பேளுக்குறிச்சி அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்
நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அருகே உள்ள ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 28). இவர் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரும், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செல்லப்பன் கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ரம்யா (27) என்பவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
விசாரணை
மேலும் பேளுக்குறிச்சி அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி பிரபு வழக்கம்போல் நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, காதல் மனைவி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட ரம்யாவின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது
மேலும் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளாவும் விசாரணை நடத்தினார். அதில் காதல் மனைவி ரம்யாவை, பிரபு தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் பிரபுவை கைது செய்தார்.
Related Tags :
Next Story