ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயம்
ஆலங்குடி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடி,
ஜல்லிக்கட்டு
ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதியில் பிரசித்தி பெற்ற முத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் போடப்பட்டிருந்தன. காலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன.
ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழுஉறுப்பினர் எஸ்.கே.மிட்டல், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உறுதிமொழி வாசிக்க ஆர்.டி.ஓ. அபிநயா மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சீறிப்பாய்ந்த காளைகள்
இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் பல காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து களத்தில் நின்று ஆட்டம் காட்டியது.
ஆவேசத்துடன் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடியது. திமிறிய காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கினர். ஒரு சில காளைகள் சுற்றி சுழன்று வீரர்களை பந்தாடியது.
48 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 844 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. இதில் 250 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இப்போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, பாத்திரங்கள், தங்கம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் என 48 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு ஏற்கனவே தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில், கறம்பக்குடி அருகே உள்ள தீத்தானிப்பட்டியை சேர்ந்த மதியழகன் (வயது 48), திருநாளூரை சேர்ந்த சதாசிவம் (45), மதுரையை சேர்ந்த ஆனந்த் (28), அஜித்குமார் (24), கருமாத்தூரை சேர்ந்த கார்த்திக் (21) உள்பட 7 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டை ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல், இ்ன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story