1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நிறைவு;கோடை விடுமுறை விடப்பட்டதால் உற்சாகம்


1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நிறைவு;கோடை விடுமுறை விடப்பட்டதால் உற்சாகம்
x
தினத்தந்தி 14 May 2022 12:33 AM IST (Updated: 14 May 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

புதுக்கோட்டை, 
கோடை விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின் தொற்று பாதிப்பு குறைந்த பின் பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் இடையில் பள்ளிகள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது. தமிழக அரசு இந்த ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்திருந்தது.
அதன்படி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து கோடைவிடுமுறை இன்றுடன் (சனிக்கிழமை) தொடங்குகிறது. விடுமுறை முடிந்த பின் அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
மாணவர்கள் உற்சாகம்
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேர்வு முடிந்ததும் மாணவ-மாணவிகள் வேகமாக வகுப்பறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் கைகளை உயர்த்தியபடியும், உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். வகுப்பு ஆசிரியர்களுக்கு கையசைத்து டாட்டா தெரிவித்தனர். ஆசிரிய, ஆசிரியைகளும் பதிலுக்கு கையசைத்து அனுப்பினர். 
புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதியில் தங்கி படித்தவர்கள் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கலர்பொடி தூவி மகிழ்ச்சி
திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் தேர்வு முடிந்தவுடன் கலர்பொடியை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சி அடைந்தனர். மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நிலவி வந்த இந்த கலாசாரம் ஆரம்பப்பள்ளி மாணவர்களிடம் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story