மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காட்டகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர், முருகன் உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 4-ந் தேதி கொடியேற்றதுடன் தீமிதி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மன், விநாயகர், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வீதி உலாவும், இரவில் மோடி எடுத்தல், ஆரியமாலை -காத்தவராயன் திருக்கல்யாணம், கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி, காளி ஆட்டம் ஆகியவை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பூக்கரகங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்துடைந்தனர். கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் குழந்தைகளுடன் அக்னி குண்டத்தில் இறங்கியும், சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடியும் தீமிதித்தனர். அப்போது பக்தர்கள் தாயே... சக்தியே... என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். திருவிழாவில் மீன்சுருட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மீன்சுருட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story