சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை
மன்னார்குடி நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடி நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.
நகர்மன்ற கூட்டம்
மன்னார்குடி நகரசபை கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மன்னை த.சோழராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கைலாசம், ஆணையர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டில் சிறப்பான நலத்திட்டங்களை அறிவித்தும், செயல்படுத்தியும் மன்னார்குடிக்கு பல திட்டங்களை அறிவித்துள்ள முதல்-அமைச்சருக்கும், பரிந்துரை செய்த உள்ளாட்சி துறை அமைச்சருக்கும், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து நகர்மன்ற தலைவர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
வார்டு நிதி ஒதுக்க வேண்டும்
செந்தில் செல்வி (அ.ம.மு.க):- மாநகராட்சி உறுப்பினர்களுக்கு வார்டு நிதி ஒதுக்குவதை போல நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் வார்டு நிதி ஒதுக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் தேவையா? என்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
சோழராஜன்(தலைவர்):- எனக்காக வழங்கப்பட்ட ஜீப்பை நான் ஆய்வு பணியை தவிர மற்ற நேரத்தில் பயன்படுத்துவதில்லை. அலுவலக பயன்பாட்டுக்கு விட்டுக்கொடுத்துள்ளேன். பழுதடைந்த வாகனங்களுக்கு பதிலாக தான் வாகனங்கள் வாங்கப்படுகிறது. நிதிநிலைக்கு ஏற்றவாறு முடிவு எடுக்கப்படும்.
திருச்செல்வி (அ.ம.மு.க.):- நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராவணன்குட்டை குளத்தை சீரமைக்க வேண்டும்.
ஆர்.ஜி.குமார் (அ.தி.மு.க.):- காசுக்கார செட்டித்தெரு, ஒத்தைத் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
ராஜபூபாலன் (தி.மு.க.):- ஜெயங்கொண்ட நாதர் கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பயன்பாடற்ற பூங்காக்கள்
ஏ.பி.அசோகன் (தி.மு.க):- எனது 15-வது வார்டில் பத்துக்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ள போதிலும் அவை அனைத்தும் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதில் 4 பூங்காக்களையாவது முதல் கட்டமாக சீரமைக்க வேண்டும்.
திருச்செல்வி (அ.ம.மு.க.):- எனது வார்டில் ராவணன் குட்டை பகுதியில் உள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும். நகராட்சி நுழைவாயில் வளைவை பிரமாண்ட அளவில் அமைக்க வேண்டும்.
ஆர்.கைலாசம் (துணைத் தலைவர்):- நகராட்சி பகுதியில் குப்பைகளை அகற்றுவது சவாலான பணியாக உள்ளது. அதனை சமாளிக்க வீடுகளிலேயே குப்பைகள் தரம் பிரித்து கொடுக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை
சோழராஜன்(தலைவர்):- மன்னார்குடி நகராட்சியில் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய், மாடு உள்ளிட்ட கால்நடைகள் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
முடிவில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அம்பிகாபதி, கே.ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் அய்யன்ரமேஷ், வீரக்குமார், மணிவண்ணன், கணேசன், சத்யா, புனிதா ஆகியோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story