மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் தாக்கி யானை சாவு
மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் தாக்கி 40 வயது யானை இறந்தது.
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் தாக்கி 40 வயது யானை இறந்தது.
மின்சாரம் தாக்கியது
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது52). இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் அவர் நெல் சாகுபடி செய்துள்ளார். நல்லாம்பட்டி சுற்றிலும் வனப்பகுதி உள்ளதால் அங்கு முகாமிட்டு உள்ள யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் வயல்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.
இதனால் வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க சீனிவாசன் தனது விவசாய நிலத்தை சுற்றியும் மின் விளக்கு எரிய விட்டு உள்ளார். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 40 வயது யானை ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்வயலில் போட்டு இருந்த மின் வயரில் சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி அந்த யானை பரிதாபமாக இறந்தது.
அதிர்ச்சி
இந்த நிலையில் நேற்று காலை சீனிவாசன் தோட்டத்திற்கு சென்றபோது யானை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் பாலக்கோடு வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 8 யானைகளில் ஒரு யானை பிரிந்து உணவு, தண்ணீர் தேடி வந்தபோது நெல்வயலில் போட்டு வைத்திருந்த மின்வயரில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் கால்நடை டாக்டர்கள் மூலம் அந்த இடத்திலேயே யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.
விசாரணை
பின்னர் வனப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டி யானையை வனத்துறையினர் புதைத்தனர். மின்சாரம் தாக்கி யானை இறந்தது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story