மரவள்ளி சாகுபடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் கலெக்டர், விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் மரவள்ளி சாகுபடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தி உள்ளார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் மரவள்ளி சாகுபடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவு பூச்சி தாக்குதல்
தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மரவள்ளியில் மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. மாவு பூச்சி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. எனவே அதை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
மாவு பூச்சியால் பாதிக்கப்பட்ட நுனி குருத்துகள் மற்றும் செடிகளை சேகரித்து தீயிட்டு அழிக்க வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அசாடிராக்டின் 0.15, 5 மி.லி, அல்லது மீன் எண்ணெய் ரோஸின் சோப்பு 2 மி.லி. அளவில் லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
உரிய ஆலோசனை
பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் விவசாயிகள் உரிய ஆலோசனைகளை பெற்று மாவு பூச்சியை கட்டுப்படுத்தலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளை கலந்து தெளிக்க கூடாது. கை தெளிப்பானை பயன்படுத்தி மட்டுமே செடிகளின் அனைத்து பகுதிகளிலும், வயல் மற்றும் வரப்புகளில் உள்ள இலைகள், களைச்செடிகள் மீதும் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும். பாதிப்படைந்த வயலில் இருந்து விதைகரணை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story