நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஊர்வலம்


நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 14 May 2022 12:44 AM IST (Updated: 14 May 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

நரிமணத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஊர்வலமாக வந்து மாவட்ட வருவாய் அதிகாரி ஷகிலாவிடம் மனு அளித்தனர்.

வெளிப்பாளையம் 
நாகையை அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 650 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி நில உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஊர்வலம்
இந்தநிலையில், கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி நில உரிமையாளர்கள், விவசாயிகள் மறுவாழ்வு நலச்சங்கத்தினர் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் நாகை வடக்கு பால்பண்ணைச்சேரி பகுதியில் இருந்து கோஷங்கள் எழுப்பியவாறு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
வருவாய் அதிகாரியிடம் மனு
 அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களில் 10 பேரை மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்க அனுமதித்தனர்.
அதன்பேரில், 10 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மாவட்ட வருவாய் அதிகாரி ஷகிலாவிடம் மனு அளித்தனர்.

Next Story