தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான செய்திகள் வருமாறு:
புகார்பெட்டி செய்தி எதிரொலி:
வேகத்தடை அகற்றப்பட்டது
மயிலாடுதுறை மன்னம்பந்தலில் இருந்து வடகரைக்கு செல்லும் சாலையில் உள்ள குளிச்சார் பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் தற்காலிகமாக 2 வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. ஆனால் பாலம் கட்டும் பணி முடிந்த பின்னரும் வேகத்தடைகள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
-பொதுமக்கள், மயிலாடுதுறை.
தெருவிளக்குகள் ஒளிருமா?
காரைக்கால் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலான தெருவிளக்குகள் பராமரிப்பின்றி சரிவர எரிவதில்லை. இதனால் கடற்கரை பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக காரைக்கால் கடற்கரைக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருள் சூழ்ந்து காணப்படுவதால் கடற்கரை பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காரைக்கால் கடற்கரை பகுதியில் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?
-மஸ்தான், காரைக்கால்.
சேதமடைந்த மின்கம்பம்
நாகை மாவட்டம் திருமருகல் பகுதி சீயாத்தமங்கையை அடுத்த மேலிருப்பு கிராமத்தில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. அதுமட்டுமின்றி மின்கம்பத்தில் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்து உள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருமருகல்.
Related Tags :
Next Story