சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ள நிலையில் விலை உயர வாய்ப்பு


சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ள நிலையில் விலை உயர வாய்ப்பு
x
தினத்தந்தி 14 May 2022 1:45 AM IST (Updated: 14 May 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து 3 ஆண்டுகளாக சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ள நிலையில் விலை உயர வாய்ப்பு உள்ளது.

விருதுநகர், 
நமது நாட்டை பொறுத்த வரையில் நமது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அது சுய தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இருப்பதில்லை.
எண்ணெய்வித்து
உலக அளவில் எண்ணெய்வித்து உற்பத்தி சாகுபடிக்கான நிலப்பரப்பு அதிகம் இருந்த போதிலும் இறக்குமதியை நம்பியுள்ள நாடாக நாம் உள்ளோம். இறக்குமதி செலவுகள் அதிகரித்ததாலும் பெரும்பாலான துறைகளில் இறக்குமதியை அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 
இந்தநிலையில் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 2019-2020-ம் ஆண்டில் 18.12 மில்லியன் டன் அளவுக்கு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்திருந்தநிலையில் 2020-2021-ம் ஆண்டில் 12.9 மில்லியன் டன் அளவிலான சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.
இறக்குமதி சரிவு 
 தற்போது 2021-2022-ம் ஆண்டுக்கான முதல் ஆறு மாதங்களில் மட்டும் இதுவரை 6.5 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் சமையல் எண்ணெய் கடந்த 20 ஆண்டுகளின் தேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் எண்ணெய் இறக்குமதி 4 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் தற்போது 18 மில்லியன் டன் அளவுக்கு அதிகரித்து உள்ளது. எனினும் அதில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வித்துக்கள் உற்பத்தி அதிகரித்து இறக்குமதியை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் விலை அதிகமாக இருந்தாலும் இந்தியா தனது சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைத்து கொண்டு தேவையை ஈடுகட்ட உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததும் இறக்குமதி சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
விலை குறையவில்லை
 ஆனால் இறக்குமதி சமையல் எண்ணெய்யின் அளவு குறைந்தாலும் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையவில்லை. இது உள்நாட்டு உற்பத்தி அதிகரித்த போதிலும் இறக்குமதி குறைந்ததாலோ அல்லது நுகர்வோரின் கொள்முதல் அளவு குறைந்து விட்டதாலோ என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதற்கிடையில் இந்தோனேசியா பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே இந்த ஆண்டில் சமையல் எண்ணெய் விலை உயர்வு எதிர்பார்ப்பை விட அதிகமாக தான் இருக்கும்.
 இவ்வாறு சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர். 

Next Story