ஈரோட்டில் துணிகரம்: தபால் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


ஈரோட்டில் துணிகரம்: தபால் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 May 2022 2:38 AM IST (Updated: 14 May 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், தபால் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோட்டில், தபால் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற தபால் அதிகாரி
ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 65). ஓய்வு பெற்ற தபால் அலுவலக அதிகாரி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
தமிழ்செல்வன் தனது மனைவியுடன், திருச்சியில் உள்ள மகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சென்றார். இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள தமிழ்ச்செல்வனின் உறவினரான பிரபு என்பவர் தன்னுடைய மகன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு நேற்று காலை சென்று உள்ளார். 
40 பவுன் நகை கொள்ளை
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தமிழ்ச்செல்வனுக்கும், ஈரோடு தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. கைரேகை நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.
அச்சம்
மேலும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் விசாரணையில், ‘வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது,’ தெரியவந்தது.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துசென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வுபெற்ற தபால் அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story