தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நோய் பரவும் அபாயம்
ஓசூர் மாநகராட்சி பஸ் நிலையத்தில் நகர பஸ்கள் வெளியே வரும் இடத்தில் இயங்கும் டீக்கடைகளில் சேமித்து வைக்கும் கழிவுநீரை இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை பஸ் நிலையத்தில் திறந்து விடுகின்றனர். இதனால் பயணிகள் அந்த கழிவுநீரில் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், ஓசூர்.
===
வேகத்தடைகள் வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூைர அடுத்த சிகரலப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே முதல் வளைவில் வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் தனியார் பஸ்களும், அதிக அளவில் செல்கின்றன. எனவே பெரிய அளவில் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
-லோகநாதன், சிகரலப்பள்ளி, கிருஷ்ணகிரி.
===
பூங்கா அமைக்கப்படுமா?
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சங்ககிரி செல்லும் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி காளிப்பட்டியில் சிறுவர் பூங்காவும், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், விளையாட்டு பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்ரமணி, காளிப்பட்டி, நாமக்கல்.
====
சேதமடைந்த குழந்தைகள் மையம்
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் குழந்தைகள் மையம் 4-வது வார்டில் இயங்கி வருகிறது. அந்த மையத்தில் சுமார் 42 குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைய கட்டிடத்தை சீரமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் ஒரு சில நாட்களிலேயே பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மேற்கூரை தரைதளம் சேதமடைந்து இருப்பதால் சாலையின் மரத்தடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மையத்தினை ஆய்வு செய்து பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாரதி, ஏத்தாப்பூர், சேலம்.
===
சேறும், சகதியுமான சாலை
சேலம் மாவட்டம் வீரபாண்டி அடுத்த பூலாவரி பஞ்சாயத்து ஆத்துக்காடு கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை அமைத்து தரவில்லை. இதனால் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. எனவே சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், ஆத்துக்காடு, சேலம்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டன. கோர்ட்டு ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து பிள்ளையார் நகர் வரை இரவு நேரங்களில் தெருநாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு சாலையில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கோர்ட்டு ரோடு, சேலம்.
Related Tags :
Next Story