பெங்களூருவில் வருகிற நவம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி
பெங்களூருவில் வருகிற நவம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்
மங்களூரு: பெங்களூருவில் வருகிற நவம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்.
தொழில் அதிபர்கள் மாநாடு
கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில் துறை சார்பில் தொழில் அதிபர்கள் மாநாடு தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று நடந்தது. மாநாட்டில் தொழில் துறை மந்திரி முருகேஷ் நிரானி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொழில் தொடங்க அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது.
அவ்வாறு நிலம் பெற்றவர்கள் தொழில் தொடங்காமல் அந்த நிலத்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக கர்நாடக மாநில தொழில் வளர்ச்சி வாரியமும்(கே.ஐ.ஏ.டி.பி.) தொழில் அதிபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுமதி இல்லை
நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அங்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை தொழில் தொடங்காமல் இருக்கும் தொழில் அதிபர்களிடம் இருந்து நிலங்கள் திரும்ப பெறப்படும். அந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி வேறு தொழில் அதிபர்களுக்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலை முழுமையாக திறக்கப்படும் வரை அதற்கான உரிம பத்திரம் வழங்கப்பட மாட்டாது. விற்பனை பத்திரம் இல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை ரியல் எஸ்டேட்டுக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.
30 ஆயிரம் ஏக்கர் நிலம்
பல நிறுவனங்கள் அரசு நிலங்களை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகின்றன. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலங்களை அந்த நிறுவனங்களுக்கே விற்க வாய்ப்பு இல்லை. தொழிற்சாலைகளால் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்.
மாநிலத்தில் முதலீட்டை ஈர்ப்பதற்காக 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தொழில்துறை சார்பில் கையகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொழில்முனைவோருக்கு தேவையான உள்கட்டமைப்புகள் செய்து தரப்படும்.
வேலைவாய்ப்புகள்...
ஏற்கனவே திட்டமிட்டபடி பெங்களூருவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.
அந்த மாநாட்டில் உலக முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள். அதன்மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story