வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்


வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 14 May 2022 2:56 AM IST (Updated: 14 May 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தாதம் பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலை வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், உபய நாச்சியார்கள் சமேத உற்சவமூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உபய நாச்சியார்கள் சமேத வரதராஜபெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார். வேத மந்திரங்கள் முழங்க பாசுரங்கள் பாட பிரகார உற்சவம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் வெள்ளோட்டம் நடைபெற்ற புதிய ரதத்தில் ரத உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வரதராஜ பெருமாளை வழிபட்டனர். தேர் தாதம்பேட்டை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்கள் வரதா..., கோவிந்தா... என சரண கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், பக்தர்களுக்கு ராஜ தரிசனம் வழங்கினார். மாலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. புஷ்பயாகம், துவாதச ஆராதனை நடைபெற்று முடிந்த பின்னர் கொடி இறக்கம் செய்யப்பட்டு பிரம்மோற்சவம் நிறைவுெபற்றது. இன்று(சனிக்கிழமை) காலை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. ரத உற்சவத்தை முன்னிட்டு காலையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்கள் ரத உற்சவம் நடைபெறும் பாதையில் உள்ள மின் கம்பிகளை அப்புறப்படுத்தினர்.

Next Story